Monday, 23 February 2009

சிக்கன் ஷெரின்

சிக்கன் ஷெரின்

தேவையான பொருட்கள்:

கோழி - 1
நெய் - கால் கப்
சிக்கன் ஸ்டாக் - 2 கப்
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
அன்னாசி - ஒரு துண்டு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
இஞ்சி - அரை அங்குலத்துண்டு
பிஸ்தா - சிறிது
பாதாம் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி பூண்டினை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும். அன்னாசியையும் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்க வேண்டும். கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகள் நீக்கி நீளவாக்கில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சிக்கன் ஸ்டாக் தயாரிக்க, கோழி எலும்புகள், நறுக்கின வெங்காயம் சிறிது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, சிறிது உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து, பிறகு நீரினை தனியே வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எலும்பு நீக்கி துண்டுக்களாக்கி வைத்துள்ள கோழிக்கறியினை தனியே குக்கரில் கால் மணி நேரம் போதுமான நீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையெனில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு சூடேறியதும் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தனியே ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

அதே நெய்யில் நறுக்கின பூண்டு, இஞ்சியினைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்ற வேண்டும். மீண்டும் வாணலியில் சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி வேகவைக்கவும். அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள், சோளமாவு சேர்த்து நன்கு விடாது கலக்கி குழம்பு கெட்டியாக வரும் வரை வேகவைக்க வேண்டும். பிறகு அன்னாசி துண்டங்களைச் சேர்த்து கலக்கி சிக்கன் மீது ஊற்றி, பாதாம், பிஸ்தா தூவி பரிமாற வேண்டும்.

டாங்டி கபாப்

டாங்டி கபாப்

தேவையான பொருட்கள்:

சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் - 8
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
தயிர் - ஒரு கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

• சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றால் கோழியின் தொடைப் பகுதி இல்லாத கால் துண்டங்கள் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றழைக்கப்படும். ஒரு முனையில் சதைப் பகுதி உருண்டையாய் குவிந்த நிலையிலும், மறுமுனையில் மூட்டு இணைப்பு எலும்புமாக பார்பதற்கு ட்ரம்ஸ் வாசிக்க உதவும் குச்சியினைப் போன்று இருக்கும்.

• கால் துண்டங்களை நன்கு கழுவி, கொழுப்புகளையும், மேல் உள்ள தேவையற்ற தோலையும் நீக்கி விட வேண்டும்.

• சுத்தம் செய்த துண்டங்களை நன்கு துடைத்து, நீர் இல்லாமல் செய்து, அதன் மேல் கத்தி கொண்டு இரண்டு மூன்று வெட்டுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை எலுமிச்சை சாற்றில் நன்கு பிரட்டி, ஊற விட வேண்டும்.

• இஞ்சி, பூண்டு தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் தண்டுபாகத்தினை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

• ஒரு மெல்லிய (மஸ்லின்) துணியில் தயிரினைக் கட்டித் தொங்க விட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரையெல்லாம் வடித்துவிட வேண்டும்.

• கடலை மாவினை குறைந்த தீயில் ஒரு அடிப்பிடிக்காத வாணலியில் இட்டு, தொடர்ச்சியாக கிளறிய வண்ணம் வறுத்துக் கொள்ள வேண்டும்.

• பிறகு அதனை எடுத்து ஆறவிட்டு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் நறுக்கின பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

• இந்த கலவையை கோழியின் கால்துண்டங்கள் மீது நன்கு பூசி, சுமார் இரண்டு மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும்.

• பிறகு எடுத்து, தந்தூரி அடுப்பில், மிதமான சூட்டில், அனைத்துப் பக்கங்களும் ஒரே அளவில் வேகுமாறு தணலில் சுட்டெடுக்க வேண்டும்.

• இதையே 220 டிகிரி C க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்து வேகவிட்டு, பிறகு ஓவனின் வெப்பநிலையை 180 டிகிரி C க்கு குறைத்து மேலும் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

• எல்லாப்புறமும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து, சாட் மசாலாத்தூள் தூவிப் பரிமாற வேண்டும்.

மட்டன் போப்ளா

மட்டன் போப்ளா

தேவையான பொருட்கள்:

மட்டன் - கால் கிலோ
சிவப்பு பூசணி (போப்ளா) - கால் கிலோ
பச்சைமிளகாய் - 2
தயிர் - அரை கப்
வெங்காயம் - 150 கிராம்
கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பிரிஞ்சி இலை - 1
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து ஒரு அங்குலத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டங்களை தயிரில் சுமார் ஒரு மணிநேரம் ஊறவிட வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு நன்கு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் அதனுடன் கரம் மசாலா பொடியைச் சேர்க்க வேண்டும்.

பிரிஞ்சி இலை, முழு பச்சைமிளகாய் மற்றும் தயிரில் ஊறிய மட்டன் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். மட்டன் நன்கு சிவக்கும் வரை வேகவைத்து பிறகு தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் வேகவிட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பூசணிக்காயைத் தோல் செதுக்கி வேகவைத்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். மசித்து வைத்துள்ள பூசணிக்காயை வெந்துகொண்டிருக்கும் கறியுடன் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும். குழம்பு கெட்டியாகி வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.

நண்டு வறுவல்

நண்டு வறுவல்

தேவையான பொருட்கள்:

நண்டு - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் கப்
கடுகு - அரை தேக்கரண்டி


செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நண்டின் ஓட்டை நீக்கி விட்டு சுத்தமாக கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும் பிறகு சுத்தம் செய்த நண்டில் நறுக்கிய வெங்காயத்தில் பாதி சேர்த்து பிறகு பாதி எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து கொண்டு பிறகு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் மீதி இருக்கும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட்டு பிறகு நண்டை போட்டு வேக விட வேண்டும். நண்டு சிவந்து வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும்.

நண்டு தக்காளி சூப்

நண்டு தக்காளி சூப்

தேவையான பொருட்கள்:

பெரிய நண்டு - 2
தக்காளி விழுது - அரை கப்
வெங்காயம் - ஒன்று
முட்டை - 2
சிக்கன் ஸ்டாக் - ஒரு கட்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெந்நீரில் சிக்கன் ஸ்டாக் கட்டியை கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தக்காளி விழுது, நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது, உதிர்த்த நண்டு கறி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 5 நிமிடம் வெந்த பிறகு கரைத்த சிக்கன் ஸ்டாக், மிளகுத் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு அதில் அடித்த முட்டையை மெதுவாக வடிகட்டி சேர்த்துக் கலக்க வேண்டும்.

வஞ்சிர மீன் குழம்பு

வஞ்சிர மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் – 750 கிராம்
சின்ன வெங்காயம் - ஐம்பது கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து
சீரகம் - கால் டீ ஸ்பூன்
வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
புளி - கைப்பிடியளவு
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - 4 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - ஏழு
மல்லி விதை - ஒரு டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுளாக நறுக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்க வேண்டும். வர மிளகாய், மல்லி, சோம்பு மூன்றையும் பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நைஸான விழுதாக அரைத்து வைக்க வேண்டும். வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்து விட்டு மற்றதை தோலுறித்து இரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்க வேண்டும்.

புளியை மூன்று டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அரைத்த விழுதையும் போட்டு கரைத்து வைக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து வெந்தயம் போட்டு வாசனை வந்ததும் வெங்காயம், ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு மூன்று நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து மூன்று நிமிடம் வதக்க வேண்டும். இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பின் மீன் துண்டங்களைப் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி பத்து நிமிடம் கழித்து திறந்து லேசாக கிண்டி விட வேண்டும்.



நண்டு மிளகு சூப்

நண்டு மிளகு சூப்

தேவையான பொருட்கள்:

தேவையானப் பொருட்கள் பெரிய நண்டு - 2
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
சோளம் - ஒரு டின்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் நண்டின் ஓட்டை எடுத்து கழுவி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். வெந்த நண்டின் சதை பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும். நண்டு கறியில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் சோளம், சோள மாவு, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.

கொதித்த பிறகு முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி பரிமாற வேண்டும்.

வஞ்சிர மீன் போண்டா

வஞ்சிர மீன் போண்டா

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் - 200 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
பூண்டு - 10 பல்
பெருஞ்சீரகத்தூள் - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 10
கருவேப்பிலை - 5 கொத்து
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
ஆப்பசோடா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் மீன் துண்டுகளை சிறிது மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக தண்ணீர்விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த மீனில் தண்ணீர் இருந்தால் அதை தனியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மீனின் முட்களை நீக்கி, அத்துடன் கடலை மாவு, அரிசி மாவு, பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை போட வேண்டும். மேலும் பெருஞ்சீரகத்தூள், ஆப்ப சோடா, தேவையான உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்



இறால் பக்கோடா

இறால் பக்கோடா

தேவையான பொருட்கள்:

இறால் - 200 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பாசி பருப்பு மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - சிறிதளவு
பூண்டு - சிறிதளவு
சோம்பு தூள் - சிறிதளவு
கடலை மாவு - 100 கிராம்
பொரிக்கடலை - 50 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு


செய்முறை:

இறாலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்பு தூள், எல்லாவற்றையும் இறாலில் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். அதனுடன் அரிசி மாவு, பாசி பருப்பு மாவு, சிறிது சூடாக்கிய எண்ணெய் சேர்த்து தண்ணீர் தெளித்து உதிர்ந்து விடும் பக்குவத்தில் பிசைய வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பக்கோடாவை பக்குவமாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக வெந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.

இறால் குழம்பு

இறால் குழம்பு

தேவையான பொருட்கள்:

இறால் - அரை கிலோ
சி. வெங்காயம் - ஐம்பது கிராம்
பூண்டு - மூன்று பல்
தக்காளி - மூன்று
எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - மூன்று கொத்து
மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன்
சீரகம் - கால் டீ ஸ்பூன்


செய்முறை:

இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும். வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்க வேண்டும். தேங்காய், சீரகத்தை அரைக்க வேண்டும். சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி சோம்பு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி இறாலை சேர்க்க வேண்டும். இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பின் தக்காளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி புளியை ஊற்ற வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இறால் சில்லி ப்ரை

இறால் சில்லி ப்ரை

தேவையான பொருட்கள்:

இறால் - அரை கிலோ
மிளகாய் பொடி - ஒரு டீ ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு பொடி - அரை டீ ஸ்பூன்
இஞ்சி & பூண்டு விழுது - அரை டீ ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒன்றரை டீ ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை தோல் நீக்கி நடுவில் உள்ள குடலை நீக்கி விட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக நான்கு முறை நீர் விட்டு கழுவ வேண்டும். பிறகு அதனுடன் மஞ்சள் பொடி, அரை டீ ஸ்பூன் மிளகாய் பொடி, சோம்பு பொடி, உப்பு, இஞ்சி & பூண்டு விழுது எல்லாம் சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்க வேண்டும்.

பச்சை மிளகாயை சிறிது பெரிய துண்டங்களாக நறுக்க வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து பாதி எண்ணை ஊற்றி இறால் கலவையை போட்டு வதக்க வேண்டும். அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். நீர் முழுதும் வற்றிய பிறகு இறக்க வேண்டும். வேறு வாணலியில் மீதமுள்ள எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். மூன்று நிமிடம் வதக்கியதும் மீதமுள்ள அரை டீ ஸ்பூன் மிளகாய் பொடி சேர்க்க வேண்டும். பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு இறால் சேர்த்து, பத்து நிமிடம் கிண்டி இறக்க வேண்டும்.

கருவாட்டுக் குழம்பு

கருவாட்டுக் குழம்பு

தேவையான பொருட்கள்:

நெத்திலிக் கருவாடு - 30
மொச்சைக் கொட்டை - அரை கப்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
கத்திரிக்காய் - 2
முருங்கைக்காய் - 3
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
மல்லி தூள் - 2 மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி


செய்முறை:

சின்ன வெங்காயத்தை இரண்டாகவும், கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்க வேண்டும். முருங்கைக்காயை இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியை நான்கு பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மொச்சைக் கொட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புளியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு கலக்கி வைக்க வேண்டும். அதிலேயே இரண்டாக கீறின் பச்சை மிளகாய், நறுக்கின தக்காளி, வறுத்து எடுத்த மொச்சை சேர்க்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் தாளித்து பின்னர் நறுக்கின சின்ன வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்ற வேண்டும்.அத்துடன் நறுக்கின கத்திரிக்காய், முருங்கைக்காய் துண்டங்களை சேர்க்க வேண்டும். வாணலியை மூடி வைத்து வேகவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் கொதிக்கும் குழம்பில் கருவாட்டைச் சேர்க்கவும். லேசாக கிளறிவிட்டு வேகவிட வேண்டும்.

இறால் கிழங்கு பொரியல்

இறால் கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்:

இறால் - 250 கிராம்
கருவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு சீரகத்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 5 டீஸ்பூன்


செய்முறை:

இறாலை சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு சீரகுத்தூள், உப்பு போட்டு புரட்டிக் கொள்ள வேண்டும். உருளைக் கிழங்கை ஒரு இஞ்ச் அளவில் கட்டம் கட்டமாக வெட்டிக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றை இறாலோடு சேர்த்து ஒரு வாணலியில் போட்டு, 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். சுமார் 5 நிமிடம் கழித்து, கிழங்கு வெந்துவிட்டதை உறுதி செய்த பிறகு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

நெத்திலி கருவாட்டு குழம்பு

நெத்திலி கருவாட்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

கருவாடு - ஒரு கோப்பை
கத்திரிக்காய் - 3
மஞ்சத்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
கருணைகிழங்கு – 250 கிராம்
சீரகத் தூள் - அரைத் தேக்கரண்டி
வறுத்த அரிசி மாவு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - அரைக் கோப்பை
வெங்காயம் - 1
தக்காளி – 1
துறுவிய தேங்காய் - அரைக் கோப்பை
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கடுகு - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்

செய்முறை:

கருவாடை அரை மணி நேரம் ஊறவைத்து, நன்கு கழுவி கொள்ள வேண்டும். கருணைக்கிழங்கை, தோல் சீவி துண்டுகளாக்கி கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடு வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்து 3 கோப்பை தண்ணில் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய், வெங்காயத்தை அரைத்து, உப்பு, தக்காளியை சேர்த்து புளி தண்ணிரில் கலக்கி வைக்க வேண்டும். பூண்டை நசுக்கி கொள்ள வேண்டும். கத்திரிக்காயை நறுக்கி கொள்ள வேண்டும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பூண்டு போட்டு நன்கு வறுத்து கத்திரிக்காயை போட்டு நன்கு வதக்க வேண்டும். கூடவே கருவாடையும் போட்டு சிறிது நேரம் வதக்கி எல்லாத் தூள்வகைகளையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு கலக்கி வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி, கருணைகிழங்கு துண்டுகளையும் போட்டு கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்து பச்சை வாசனை நீங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.

மசாலா மீன் வறுவல்

மசாலா மீன் வறுவல்

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 7
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 10 இலை
புளி - சிறிதளவு
உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

சோம்பு, பூண்டு, கறிவேப்பிலை, புளி, மிளகாய் வற்றல், வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மீன் துண்டுகளில் அரைத்த விழுதை தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடு வந்ததும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்க வேண்டும்.

வௌவால் மீன் மசாலா

வௌவால் மீன் மசாலா

தேவையான பொருட்கள்:

வௌவால் மீன் - 2
இஞ்சி - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் - அரைத் தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 150 மி.லி.
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 2
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
தேங்காய் - ஒன்று
வினிகர் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

மீனை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ள வேண்டும். புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் உப்பு மற்றும் மீன் துண்டங்களைப் போட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.

தேங்காயைத் துருவி, தேங்காய் நீரைச் சேர்த்து முதல் பால் அரை கப் அளவிற்கும், இரண்டாம் பால் அரை கப் அளவிற்கும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, மற்றும் பூண்டினைத் தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயினைக் கழுவி சுத்தம் செய்து, காம்புகளை நீக்கி, இரண்டாகக் கீறி விதைகளை நீக்கிவிட்டு, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். நறுக்கின இஞ்சி, பூண்டினைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். பிறகு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் கலக்க வேண்டும். அதன்பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

மல்லித்தூள், சோம்புத்தூள், ஏலப்பொடி மற்றும் பொடித்த கிராம்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். இப்போது, இரண்டாவதாக எடுத்த தேங்காய்பாலினை ஊற்றி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

அதன் பிறகு, மீன் துண்டங்களைப் போட்டு, கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் வினிகர் விட்டு, கூடவே முதலில் எடுத்த தேங்காய் பாலினையும் ஊற்றி மூடி வைத்து வேகவிட வேண்டும். தீயைச் சற்று குறைத்து வைத்து மீன் நன்கு வேகும் வரை வைத்து இருக்க வேண்டும். வெந்ததும் இறக்கிப் பரிமாற வேண்டும்.

மீன் குருமா

மீன் குருமா

தேவையான பொருட்கள்:

மீன் - அரை கிலோ
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
நெய் - 50 கிராம்
மிளகாய் தூள் - அரைக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
பூண்டு - 1
பச்சைமிளகாய் - 4
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 4
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிதளவு
தயிர் - ஒரு ஆழாக்கு

செய்முறை:

மீனை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், மல்லி இவற்றை அம்மியில் வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மசாலாக்களை கழுவிய மீன் துண்டுகள் மீது தடவ வேண்டும்.

பாத்திரத்தில் நெய் விட்டு வெங்காயத் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி நெய்யை கடாயில் ஊற்றி காய்ந்ததும் மீனைப் போட்டு பொரிய விட வேண்டும். பின்னர் அதில் தக்காளி, பச்சைமிளகாய், தயிர், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொதிக்கவிட வேண்டும். பச்சை வாசனை மாறியதும் பொரித்து வைத்திருக்கும் வெங்காயத்தை மீன் மீது போட்டு சற்று நேரம் அனலில் வைத்து இறக்க வேண்டும்.

Sunday, 22 February 2009

ஈரல் வறுவல்

ஈரல் வறுவல்

தேவையான பொருட்கள்:

ஆட்டு ஈரல் - 500 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 4
இஞ்சி & பூண்டு விழுது - ஒரு டீ ஸ்பூன்
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
சோம்பு - ஒரு டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - முன்று டேபிள் ஸ்பூன்
பட்டை, இலை - தாளிக்க

செய்முறை:

ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக வெட்டி இருநூறு மி.லி தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடு வேக வைக்க வேண்டும். தண்ணீர் முழுவதும் சுண்டி விட வேண்டும்.

மிளக, சீரகம், சோம்பு, வர மிளகாய் நான்கையும் பத்து நிமிடம் ஊற வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஈரலில் போட்டு பிசறி அரை மணி நேரம் வைக்க வேண்டும். வெங்காயத்தை நீள நீளமாகவும், பச்சை மிளகாயை சிறிது சிறிதாகவும் நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி பட்டை, இலை தாளிக்க வேண்டும்.

வாசனை வந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி, சிவந்ததும் ப. மிளகாய், கறிவேப்பிலை போட வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இஞ்சி & பூண்டு விழுது, ம.பொடி, ஒரு டீ ஸ்பூன் உப்பு மூன்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.

வதங்கியதும் ஈரல் கலவையைப் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அடிக்கடி திறந்து கிளறி விட வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறக்க வேண்டும்.

முட்டை கட்லெட்

முட்டை கட்லெட்

தேவையான பொருட்கள்:

முட்டை - 5
மிளகாய்தூள் - 1 கரண்டி
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
வெங்காயம் - 1
தேங்காய்பால் - அரை கப்
மிளகுதூள் - 1 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 250 கிராம்

செய்முறை:

முட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.

நண்டு சூப்

நண்டு சூப்


தேவையான பொருட்கள்:
நண்டு - அரை கிலோ
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 துண்டு
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - 3
கான்ஃப்ளார் - ஒன்றரை தேக்கரண்டி
அஜினோ மோட்டோ - கால் தேக்கரண்டி
பால் - கால் கப்

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து கழுவி பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும். பிறகு ஆற விட்டு ஓட்டில் உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவேண்டும். வெங்காயத்தாளில் உள்ள மேல் தாளை பொடியாக வெட்டி தனியாக வைக்கவேண்டும். பாலில் கான்ஃப்ளாரை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வதக்கியதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது நண்டு சதையை போட்டு, அஜினோ மோட்டோ, கான்ஃப்ளார் கலந்து பாலை ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு ஒரு கப்பில் ஊற்றி மிளகுத் தூள் தூவி, நறுக்கிய வெங்காயத் தாள் தூவி பரிமாறவேண்டும்.

மட்டன் சாப்ஸ்

மட்டன் சாப்ஸ்

தேவையான பொருட்கள்:

கறி - 500 கிராம்
பச்சைமிளகாய் - இரண்டு
தனியாதூள்- ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - இரண்டு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
கரம் மசால தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கறியை நன்றாகக் கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியாதூள் சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்ற வேண்டும். இவை அனைத்தையும் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்றவிட வேண்டும்.

ஒரு நான் ஸ்டிக் தோசை தவ்வாவில் எண்ணை ஊற்றி கரம் மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து அதில் கறியைப் போட்டு நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.

கறி வடை

கறி வடை

தேவையான பொருட்கள்:

கொத்திய கறி - 100 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி
தேங்காய் - இரண்டு பத்தை
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 துண்டு
காய்ந்த மிளகாய் - 2
கொத்துமல்லிக் கீரை - கால் கட்டு
கடலை பருப்பு - கால் கப்
மைதா - ஒரு தேக்கரண்டி
கார்ன்பிளர் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிப்பதகுத் தேவையான அளவு


செய்முறை:

கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு வேக வைத்து தண்ணிரை வற்ற விட வேண்டும். அதில் ஆலிவ் ஆயில், வெங்காயம் போட்டு நன்கு பிறட்டி எடுத்து, கொத்து மல்லியும், தேங்காயை துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆற வைக்க வேண்டும்.

மிக்சியில் முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையைப் போட்டு நல்ல அரைக்க் வேண்டும். பின்பு ஒரு தவ்வாவில் வேண்டிய வடிவில் தட்டி பொரித்தெடுக்க வேண்டும்.

இறால் உப்புமா

இறால் உப்புமா

தேவையான பொருட்கள்:

ரவை - 250 கிராம்
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைகரண்டி
கேரட் - 1
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணை - 6 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி


செய்முறை:

இறாலை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். பின்பு கழுவி மஞ்சள்தூள் போட்டு சுருட்ட வேண்டும். ரவையை கருகாமல் வறுத்து ஆறவைக்க வேண்டும். சட்டியை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தையும் கேரட்டையும் வட்டவடிவமாக அரிந்து அதையும் சேர்த்து வதக்க வேண்டும்.

அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு தக்காளி, கொத்துமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்தததும் இறாலை சேர்த்து இலேசான சூட்டில் ஐந்து நிமிடம் விட வேண்டும்.

ஒரு கப் ரவைக்கு ஒன்றரை பங்கு வீதம் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் ரவையைக் கொட்டி தீயைக் குறைத்து நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

நண்டு குழம்பு

நண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

நண்டு - ஒரு கிலோ
சோம்பு - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
வெங்காயம் - 3
நாட்டுத் தக்காளி - 4
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சீரகம், சோம்பு, பூண்டு மற்றும் மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கி பிறகு அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு புளியை கரைத்து ஊற்றி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதித்த பிறகு நண்டை போட்டு மூடிவிட வேண்டும். நண்டு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கி மூடி வைக்க வேண்டும்.

மட்டன் கறி கூட்டு

மட்டன் கறி கூட்டு

தேவையான பொருட்கள்:

மட்டன் (எலும்பு இல்லாதது) - 250 கிராம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பட்டர் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று சிறியது
வெங்காயம் - 2
தந்தூரி மசாலா - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகதூள் - கால் தேக்கரண்டி
தக்காளி - 2
தயிர் - ஒரு மேசைக்கரண்டி
கொத்துமல்லி இலை - 2 மேசைக் கரண்டி
பச்சைமிளகாய் - 2
மிளகாய் தூள் - முக்கால் தேக்கரண்டி
பட்டை - சிறிதளவு

செய்முறை:

கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். குக்கரில் எண்ணையை காய வைத்து பட்டையைப் போட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு கறி, புதினா, கொத்துமல்லி இலையை பொடியாக அரிந்து போட வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கிப் போட்டு தீயை சிம்மில் ஐந்து நிமிடம் விட வேண்டும். பின்பு எல்லா தூள் வகைகளையும் போட்டு கிளறி தயிரையும் சேர்த்து முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் முன்று, நான்கு விசில் விட வேண்டும். ஆவி அடங்கியதும் தீயை சிம்மில் வைத்து தண்ணீர் வற்றி கூட்டும், கறியுமாய் இருக்கும் போது இறக்க வேண்டும்.


நெய் சாதம்

நெய் சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கிலோ
நெய் - 200 கிராம்
வெங்காயம் - 40 கிராம்
கொத்தமல்லி இலை - 1 கட்டு
அக்ரூட் - 2
பாதாம்பருப்பு – 7
தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 10
பிஸ்தா பருப்பு - 10
கசகசா, சாரப்பருப்பு – தலா 2 தேக்கரண்டி
ஜாதிக்காய் - 1
லவங்கப்பட்டை - 1 துண்டு
கிராம்பு - 10
ஏலக்காய் - 10
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொத்துமல்லி இலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சாரப் பருப்பு, அக்ரூட் பருப்பு, பிஸ்தா, கசகசா, பாதாம் பருப்பு, ஜாதிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

பின்பு நெய்யை பாத்திரத்தில் ஊற்றி, காயவிடவும். அதில் ஏலம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை போட்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அரைத்த சாமான்களை அதில் போட்டுக் கிளறி, தேங்காய்ப்பாலும் நீருமாக 2 லிட்டர் அளவுக்கு ஊற்றி அரிசியையும் சேர்த்து கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும். முக்கால் வேக்காட்டில் இறக்கி வைத்தால், நெய் சாதம் பரிமாறுவதற்குத் தயார்.


தக்காளி சாதம்

தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்:

தக்காளி - அரைக்கிலோ
வெங்காயம் - 200 கிராம்
உளுந்து பருப்பு, சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய் - 7
உப்பு மற்றும் கொத்துமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை:

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தைப் போட்டு ஆற வைக்கவும். வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணைய் விட்டு கடுகு, உளுந்து பருப்பை வறுக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும். அதனுடன் தக்காளிப் பழத்தை நறுக்கிப்போட்டு, சாம்பார்ப் பொடியைச் சேர்த்து வதக்கவும். வாணலியில் இருப்பவற்றை சாதத்தின் மீது கொட்டிக் நன்றாகக் கிளறவும். ‏இதனுட‎ன்‏ உப்பு, கொத்தமல்லி இலைகளைப் போட்டு சாதத்தை நன்றாகக் கிண்டினால், தக்காளி சாதம் ரெடி. 

வெண்பொங்கல்

வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரைக்கிலோ
முந்திரி பருப்பு - 100 கிராம்
நெய் - 200 கிராம்
பயத்தம் பருப்பு - 100 கிராம்
மிளகு, சீரகம், உப்பு - தலா 1 தேக்கரண்டி
இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் நீரை விட்டு கொதிக்க விடவும். அரிசியையும், பயத்தம் பருப்பையும் அதில் போட்டு, வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நிறைய நெய் ஊற்றி காய விடவும். பின்பு அதில் மிளகு, பெருங்காயம், சீரகம், இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்கவும்.

வறுத்ததோடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து பொங்கலில் போட்டு நன்றாகக் கிளறவும். மீதி நெய்யை காய வைத்து பொங்கலில் ஊற்றி, ‏இறக்கி வைக்கவும்.

சர்க்கரைப் பொங்கல்

சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1.5 லிட்டர்
வெல்லம் - 1000 கிராம்
திராட்சை - 75 கிராம்
கடலைப் பருப்பு - 200 கிராம்
முந்திரி பருப்பு - 250 கிராம்
பால் - அரை லிட்டர்
ஏலக்காய் - 15
நெய் - அரைக் கிலோ
பயத்தம் பருப்பு - அரைக் கிலோ
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே எடுத்து வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ள வே‎ண்டும். பிறகு அதே வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வே‎ண்டும். அதேபோல் முந்திரி பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ள வே‎ண்டும்.

அடுத்து ஒரு சட்டியில் 6 லிட்டர் நீர் ஊற்றி அடுப்பில் இட்டுக் கொதிக்க வைக்க வே‎ண்டும். நீர் கொதித்தவுடன் அரிசி மற்றும் பருப்புகளை கலந்து போட வே‎ண்டும். இவை நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி நன்றாகக் கிளற வே‎ண்டும். அவ்வாறு கிளறும்போது வறுத்த முந்திரிப் பருப்பையும், திராட்சைப் பழத்தையும் போட வேண்டும். நிதானமான சூட்டில் வேக விட வே‎ண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை உடைத்துப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகு பதமானதும், அடுப்பில் வேகும் சாதத்தில் கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறிவிட வேண்டும்.

பின்பு தேங்காய் துருவல், நெய் கியவற்றைச் சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து, இறக்கி விடவும்.

தேங்காய் சாம்பார்

தேங்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு 200 கிராம்

துருவிய தேங்காய் 100 கிராம்

வற்றல் மிளகாய் 10

வெங்காயம் 150 கிராம்

புளி 40 கிராம்

சாம்பார்ப் பொடி 4 தேக்கரண்டி

வெந்தயம் ஒரு தேக்கரண்டி

தக்காளி 100 கிராம்

கடுகு 1 தேக்கரண்டி

பெருங்காயம் 3 சிட்டிகை

தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள்

செய்முறை:

துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும். புளியை நீர் விட்டுக் கரைத்து அதனுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வற்றல் மிளகாய் போடவும். கடுகு வெடித்ததும், வெந்தயம் போட்டு வதக்கவும். வெந்தயம் சிவந்ததும் உரித்த வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

பின்பு அதனுடன் புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். வேக வைத்த பருப்பை சாம்பார்த் தூள், தேங்காயுடன் போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அதை இறக்கி வைத்து பரிமாறவும்.


தேங்காய் சாதம்

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ
தேங்காய் - 1
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 7
நல்லெண்ணைய் - 100 மி.லி.
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய துண்டு
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

பொல பொலவென்று சாதத்தை வடித்து ஆற வைக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு, அதில் துறுவிய தேங்காயைப் போட்டு பொன் நிறத்திற்கு வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தை வறுத்து தூள் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து அதில் கடுகைப் போடவும்.

கடுகு வெடித்ததும் அதில் மிளகு மற்றும் உளுந்து பருப்பை போட்டு, பருப்பு செந்நிறத்திற்கு வந்ததும் அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரியும் தருணத்தில் இறக்கவும். வாணலியில் இருப்பதை ஆற வைத்த சாதத்தின் மேல் கொட்டவும். தேங்காய், பெருங்காயப் பொடி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளறவும்.

புளியோதரை

புளியோதரை

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 கிராம்
புளி - 50 கிராம்
நல்லெண்ணை - 100 மி.லி.
காய்ந்த மிளகாய் - 5
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 30 கிராம்
வெங்காயம் - 1 துண்டு
எள் - ஒரு தேக்கரண்டி
உளுந்துப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ஊற வைக்கவும். பின்பு அதை சாதமாக வடித்து, ஆற வைக்கவும்.

கடலைப் பருப்பை ஊற வைக்கவும். வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும். பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். புளியைக் கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணையைப் பாத்திரத்தில் ஊற்றி காய வைக்க வேண்டும். பின்பு அதில் கடுகைப் போட வேண்டும். கடுகு வெடித்ததும் ஊறவைத்த கடலைப் பருப்பை எடுத்துப் போடவும். கடலைப் பருப்பு சிவந்ததும் உளுந்துப் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலையை போடவும்.

மிளகாய் வதங்கிய பின்னர் கரைத்த புளியை ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்., மஞ்சள் தூள், பொடி செய்த பெருங்காயம் ஆகியவற்றையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதை இறக்கி வைத்து, ஆறின சாதத்தில் கலந்து நன்கு கிளறவும். கிளறும்போது பொடி செய்த வெந்தயம், எள் இரண்டையும் கலக்க வேண்டும்.


வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கிலோ
கொத்தமல்லி - 1 கட்டு
உருளைக் கிழங்கு - 100 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
டால்டா - 100 கிராம்
இலவங்கம் - 1துண்டு
தேங்காய் - 1
பச்சை மிளகாய் - 12
காலி பிளவர் - 200 கிராம்
பூண்டு - 100 கிராம்
ஏலக்காய் - 10
கிராம்பு - 10
பட்டாணி - 100 கிராம்
நல்லெண்ணைய் - 100 கிராம்
உப்பு மற்றும் புதினா - தேவையான அளவு
கேசரிப் பவுடர் - கால் தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை ஊறவைக்கவும். காய்களை ஒரே அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைத்து, எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.



பட்டாணி பாத்

பட்டாணி பாத்

தேவையான பொருட்கள்:

சேமியா - 500 கிராம்
பச்சை மிளகாய் - 13
முந்திரி பருப்பு - 1 மேஜைக் கரண்டி
ரவை - 500 கிராம்
உளுந்துப் பருப்பு - முக்கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பச்சைப் பட்டாணி - 2 மேஜைக் கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
நெய் - 1 மேஜைக் கரண்டி
எலுமிச்சம் பழம் - 1
இஞ்சி - சிறு துண்டு
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு

செய்முறை:

ரவை, சேமியாவை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்துப் பருப்பு, முந்திரிப்பருப்பு, கடுகு ஆகியவற்றை வாணலியில் நெய்யை ஊற்றித் தாளித்து, அதனுடன் பட்டாணி, இஞ்சி, மிளகாயைப் போட்டு வதக்கிக் எடுத்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு நீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்ததும் ரவை, சேமியா இரண்டையும் போட்டுக் கிளறி, நெய் ஊற்றி, கறிவேப்பிலை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைக் கலக்கவும். இதனுடன் கடையில் விற்கும் ரொட்டிகளை வாங்கி துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்துப் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

பருப்பு சாதம்

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்:

அரிசி _- அரைக்கிலோ
துவரம் பருப்பு – கால் லிட்டர்
நெய் - 4 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 125 மி.லி.
வெந்தயம் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - சிறு துண்டு
தனியா - 2 மேஜைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - சிறு துண்டு
பச்சை மிளகாய் – 7
புளி – தேவையான அளவு

செய்முறை:

மிளகாய், வெந்தயம், தனியா ஆகிவற்றை எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் இடித்து பொடி செய்து கொள்ளவும். பருப்பை அரை லிட்டர் நீரில் மஞ்சள் பொடி கலந்து வேகவிடவும்.

நன்றாக பருப்பு வெந்ததும் மூன்று லிட்டர் நீர் விடவும். அதனுடன் அரிசியைப் போட்டு வேகவிடவும். அரிசியும் பருப்பும் நன்றாக வெந்து பொங்கல் போல் வரும் சமயத்தில் புளியைக் கரைத்து அதில் ஊற்றி நன்றாகக் கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் போடவும். கடுகு வெடிக்கும்போது அதை பருப்பு சாதத்துடன் கலந்து நன்றாகக் கிளறவும். பின்னர் சாதத்துடன் வறுத்துப் பொடித்த மிளகாய் வற்றல், வெந்தயம், மசாலாப் பொடி, தனியா ஆகியவற்றைப் போட்டு, மறுபடியும் சிறிது புளியைக் கரைத்து ஊற்றவும்.

இதனுடன் கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த சாதத்தை சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்தால் பருப்பு சாதம் கெட்டியாகி விடவும்.

லெமன் ரைஸ்i

லெமன் ரைஸ்

தேவையான பொருட்கள்:

எலுமிச்சம் பழம் – 2 அல்லது 3
மஞ்சள் பொடி – 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வற்றல் மிளகாய் - 4
உளுந்து பருப்பு - முக்கால் தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
கறிவேப்பிலை மற்றும் உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சாதத்தை பொலபொலவென்று வடித்துக் கொள்ள வேண்டும். அதை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி அதில் மஞ்சள் பொடி, நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். கடுகு, உளுந்துப் பருப்பு, வற்றல் மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து சாதத்தில் கொட்ட வேண்டும். அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எலுமிச்சம் பழங்களை சாறு பிழிந்து கொட்டைகளை நீக்கி, சாதத்தில் சேர்க்க வேண்டும். அதனுடன் உப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இப்போது எலுமிச்சை சாதம் தயார்.

கேரட் அல்வா

கேரட் அல்வா

தேவையான பொருட்கள்:

கேரட் - 200 கிராம்
நெய் - 400 கிராம்
முந்திரிப்பருப்பு - 75 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
மைதா மாவு - தேவையான அளவு
வெண்ணிலா எஸன்ஸ் - கொஞ்சம்


செய்முறை:

கேரட்டை மென்மையாகத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். துருவிய கேரட்டை கொஞ்சம் பால் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் அதனை நன்கு மசித்து மைதாவுடன் கரைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையைப் பாகுபோல் காய்ச்சி இந்தக் கலவையுடன் கலந்து கைபடாமல் கிளறி விட வேண்டும்.

கலவை சற்று கெட்டியாக வந்தவுடன் நெய் சேர்த்து மறுபடியும் கிளற வேண்டும். கேரட் சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து நெய் கசியத் தொடங்கும்போது அதனுடன் முந்திரிப் பருப்பு, வெண்ணிலா எஸன்ஸ் சில துளிகள் விட்டு இறக்கி வைத்து விடவும்.

பாதாம் அல்வா

பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு - 250 கிராம்
பால் - 200 மி.லி.
சர்க்கரை - 500 கிராம்
நெய் - 800 மி.லி.
ஏலக்காய் - 5

செய்முறை:

பாதாம் பருப்பை நன்றாக ஊறவைத்து, பின்பு அதை தோல் நீக்கி அரைக்க வேண்டும். அரைத்த விழுதை பாலில் கரைக்க வேண்டும்.

வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்க வேண்டும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கைபடாமல் கிளற வேண்டும். கிளறும்போதே கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்வா பதமாக வரும்போது இறக்கி வைத்து விடவும்.

மிளகு ரசம்

மிளகு ரசம்

தேவையான பொருட்கள்:

தக்காளிப்பழம் - 3
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
புளி - கைப்பிடி அளவு
பூண்டு - 6 பல்
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
துவரம்பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு


செய்முறை:

தக்காளிகளை நறுக்கி 700 மில்லி தண்ணீரில் போட்டு, அதனுடன் புளியைச் சேர்க்க வேண்டும். மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றைப் பொடி செய்து புளிக்கரைசலில் போட வேண்டும். அதனுடன் பூண்டை தட்டிப் போட்டு கொதிக்க விட வேண்டும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், கடுகு சேர்க்க வேண்டும். அது வெடித்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் கொத்தமல்லி இலையையும் சேர்த்து ரசத்தில் ஊற்றி இறக்கி வைத்து விட்டால் மிளகு ரசம் தயார்.

தயிர்க்குழம்பு

தயிர்க்குழம்பு

தேவையான பொருட்கள்:

கெட்டித் தயிர் - 2 கப்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கொஞ்சம்
கொத்தமல்லி இலை - கொஞ்சம்

செய்முறை:

தயிரை கரண்டியால் நன்றாகக் கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை 2 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெயை சூடு செய்து அதில் கடுகு போட வேண்டும். கடுகு வெடித்ததும் அதனுடன் பெருங்காயத் தூள், கரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளற வேண்டும். இது கொதிக்கும்போது, தயிரை அதில் ஊற்றி நிறம் மாறும்வரை கிளற வேண்டும். பின்பு அரிசி மாவை அரை மேசைக்கரண்டி நீர் விட்டு கரைத்து குழம்பில் ஊற்றி கிளற வேண்டும்.

குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். அதனுடன் கொத்தமல்லி இலையை சேர்த்து பரிமாற வேண்டும்.


தக்காளி ரசம்

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்:

தக்காளி: 250 கிராம்
எண்ணெய்: 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை: ஒரு கொத்து
பூண்டு: 4 துண்டு
மிளகு: அரை தேக்கரண்டி
சீரகம்: அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்: 3
கடுகு: அரைத் தேக்கரண்டி
கொத்துமல்லி இலை: அரை கட்டு
ரசப்பொடி: ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தக்காளியை நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகு, பூண்டு, மிளகாய், சீரகம் ஆகியவற்றை பச்சையாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை தக்காளி சாறுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டிவிடவும். பின்பு பாத்திரத்தை மூடி, அளவோடு கொதிக்க வைக்கவும்.



பாகற்காய் குழம்பு

பாகற்காய் குழம்பு

தேவையான பொருட்கள்:

பாகற்காய்: 350 கிராம்
மிளகாய்: 10
மிளகு: 1 தேக்கரண்டி
அரிசி மாவு: 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதை: 4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு: 4 தேக்கரண்டி
தேங்காய்: 1
துவரம் பருப்பு: 2 மேஜைக்கரண்டி
பெருங்காயம்: சிறு துண்டு
எண்ணெய்: 2 மேஜைக்கரண்டி
புளி: கைப்பிடி அளவு
மஞ்சள் பொடி: 3 தேக்கரண்டி
வெல்லம்: அரை அச்சு
கறிவேப்பிலை, உப்பு, கடுகு: தேவையான அளவு



செய்முறை:

புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை நறுக்கி கழுவிக் கொள்ள வேண்டும். அதனுடன் 2 கரண்டி புளிக் கரைசலைச் சேர்த்து, கொஞ்சம் நீர் விட்டு, வெல்லம், மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றைக் கலந்து சட்டியில் வேக வைக்க வேண்டும்.

துவரம் பருப்பையும், கொஞ்சம் கடலைப் பருப்பையும் தனியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகு, கடலைப்பருப்பு, கொத்துமல்லி விதை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்கும் வரை வறுக்க வேண்டும். பின்பு அதனுடன் பெருங்காயத்தையும் பொரித்துக் கொண்டு, எல்லாவற்றையும் மிக்ஸியில் வைத்து அரைக்க வேண்டும்.

பாகற்காய் வெந்ததும் மீதமுள்ள புளிக்கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டுக் கலக்கி, அதில் வேக வைத்த பருப்புகளைக் கொட்ட வேண்டும்.

அதனுடன் மிளகாய், கடுகு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, மாவைக் கரைத்து ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்பு கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கி வைத்தால் பாகற்காய் குழம்பு தயார்.

மோர்க்குழம்பு

மோர்க்குழம்பு

தேவையான பொருட்கள்:

புளித்த மோர்: 2 ஆழாக்கு
கடலைப் பருப்பு: 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்: 5
பெருங்காயம்: சிறு துண்டு
துவரம்பருப்பு: 1 தேக்கரண்டி
தேங்காய்: அரை மூடி
கடுகு: அரை தேக்கரண்டி
உளுந்துப் பருப்பு: 1 தேக்கரண்டி
தனியா: 2 தேக்கரண்டி
வெந்தயம்: அரை தேக்கரண்டி
அரிசி மாவு: ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி: கொஞ்சம்
உப்பு: தேவையான அளவு


செய்முறை:

மோரை எடுத்து அதில் 2 சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்க்க வேண்டும். அதில் அரிசி மாவு, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைப் போட்டு கலக்க வேண்டும். வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாய், உளுந்துப் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுத்து அம்மியிலிட்டு அதனுடன் தேங்காய்த் துருவல், மிளகாய் சேர்த்து மைபோல அரைக்க வேண்டும்.

அரைத்ததை மோரில் போட்டு நன்கு கலக்க வேண்டும். இதை அடுப்பிலேற்றி நுரைக்கும் அளவுக்குக் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும். இதில் கடுகு, உளுந்துப் பருப்பைத் தாளித்துக் கொட்டிவிட்டால் மோர்க்குழம்பு தயார்.

பீட்ரூட் சூப்

பீட்ரூட் சூப்

தேவையான பொருட்கள்:

பீட்ரூட்: அரை கிலோ
வெங்காயம்: 1
எண்ணெய்: 3 மேஜைக் கரண்டி
உருளைக்கிழங்கு: 1
துருவிய எலுமிச்சம் பழத்தோல்: அரைக் கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு: 1 தேக்கரண்டி
உப்பு, மிளகுத்தூள்: தேவைக்கேற்ப

செய்முறை:

பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு, நறுக்கிய பீட்ரூட், உருளைக்கிழங்கு துண்டுகள், துருவிய எலுமிச்சம் பழத்தோல், தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். 15 நிமிடங்கள் வரை இவற்றை கொதிக்க விடவேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் புதினா இலை, கிரீம் சேர்த்து சூடாகப் பறிமாற வேண்டும்.



வெள்ளரிக்காய் சூப்

வெள்ளரிக்காய் சூப்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1
துருவிய வெள்ளரிக்காய் - 1
மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி
பாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி
வெண்ணெய் - 25 கிராம்
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நறுக்கி 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.



தேங்காய் பால் சூப்

தேங்காய் பால் சூப்

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் - அரை முடி
பாதாம் பருப்புத் தூள் - 1 மேசைக் கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக் கரண்டி

செய்முறை:

தேங்காய்ப் பால், கடுகு, வெங்காயம் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும். காய்கறி வேக வைத்த சாறு 3 கப்புடன் மசாலாவைச் சேர்த்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெங்காயத்தை நெய்யில் வதக்கி சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கரண்டியால் கிளறிவிடவும். சில நிமிட கிளறலுக்குப் பின் தேங்காய்ப் பால் சூப் தயார்.

ரவா கேசரி

ரவா கேசரி

தேவையான பொருட்கள்:

ரவை - 1 டம்பளர்
சர்க்கரை - 2 டம்பளர்
ஏலக்காய் - 5
நெய் - அரை டம்பளர்
முந்திரிப் பருப்பு - 10
கேசரி பவுடர் - 1 தேக்கரண்டி
பன்னீர் - 2 தேக்கரண்டி


செய்முறை:

முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏலக்காயை தூள் செய்து கொள்ள வேண்டும். நெய்யை உருக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே நெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்க வேண்டும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளற வேண்டும். ரவை நன்றாக வெந்ததும், சர்க்கரையை சேர்த்துக் கிளற வேண்டும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்ற வேண்டும், பன்னீரையும் சேர்க்க வேண்டும். உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வர வேண்டும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச் சேர்த்துக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விட வேண்டும்.

ஆப்பிள் சூப்

ஆப்பிள் சூப்

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 4
சர்க்கரை - 4 தேக்கரண்டி
லவங்கப்பட்டை - 2 துண்டு
கிரீம் - அரைக் கோப்பை
தண்ணீர் - 500 மில்லி
எலுமிச்சம் பழத்தோல் - அரைத் தேக்கரண்டி
கார்ன் மாவு - 2 தேக்கரண்டி
தேன் - 1 மேசைக் கரண்டி


செய்முறை:

ஆப்பிள் பழங்களைத் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய ஆப்பிள்கள், எலுமிச்சம் பழத் தோல், லவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்துக் கலக்கி, மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சம் பழத் தோலையும், லவங்கப் பட்டையையும் நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

கார்ன் மாவை அரை கோப்பை தண்ணீரில் சேர்த்துக் கலக்க வேண்டும். சர்க்கரை, தேன் மற்றும் கார்ன் மாவை சூப்போடு சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் 5 நிமிடம் சுட வைக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து, பிரிட்ஜில் வைத்து குளிச்சியாக கிரீமுடன் பரிமாற வேண்டும்.

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் 1 கோப்பை

சர்க்கரை 1 கோப்பை

முந்திரிப் பருப்பு 25 கிராம்

ஏலக்காய் தூள் 4 (பொடித்தது)

நெய் 4 ஸ்பூன்.


செய்முறை:

தேங்காயை நன்றாகத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகு வைக்க வேண்டும்.

பாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துறுவலை சேர்த்துக் கிளற வேண்டும். நன்றாக சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூளைச் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.

பாதி ஆறியதும், துண்டு போட்டு வைக்க வேண்டும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பி ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.

முள்ளங்கி சூப்

முள்ளங்கி சூப்

தேவையான பொருட்கள்:

சிவப்பு முள்ளங்கி - 2
பார்லி அரிசி - 100 கிராம்
பச்சைப் பட்டாணி - சிறிதளவு
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு
காரட் - 1
பால் - 100 மில்லி
காலிபிளவர் - சிறிதளவு

செய்முறை:

பார்லியுடன் அரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து முக்கால் மணி நேரம் வேக வைக்க வேண்டும். பின்னர் முள்ளங்கி, காலிபிளவர், காரட் ஆகியவற்றை நறுக்கி பார்லியுடன் சேர்த்து மீண்டும் வேக வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து மிளகுத்தூள், உப்பு கலந்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கி ஆற வைக்க வேண்டும்.



ஜிலேபி

ஜிலேபி

தேவையான பொருட்கள்:

மைதா - கால் லிட்டர்
சீனி - முக்கால் லிட்டர்
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
நெய் - அரை லிட்டர்
தயிர் - 2 தேக்கரண்டி


செய்முறை:

முதல் நாள் இரவே மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் சீனியை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் நெய்யைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போல பிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்க வேண்டும்.

பூசணி அல்வா

பூசணி அல்வா

தேவையான பொருட்கள்:

துருவிய வெள்ளைப் பூசணி - 1 கோப்பை
சர்க்கரை - 1 கோப்பை
நெய் - அரை கோப்பை
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி.
வறுத்த முந்திரி - 12


செய்முறை:

துருவிய பூசணிக்காயை ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வெந்த பூசணித் துறுவலுடன் சர்க்கரையை சேர்த்து, நன்றாகக் கரைந்ததும் நெய் சேர்த்துக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வைத்து, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாற வேண்டும்.

மைசூர் பாகு

மைசூர் பாகு

தேவையான பொருட்கள்:


கடலை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - இரண்டரை கோப்பை
நெய் - 2 கோப்பை

செய்முறை:

கடலை மாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். நெய்யை அடுப்பில் வைத்து சுட வைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையை கால் டம்பளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துப் பாகு வைக்க வேண்டும். கம்பிப் பாகு வந்ததும் பாகில் சிறிது சிறிதாக மாவு சேர்த்துக் கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நெய்யும், மாவும் மாறி மாறி சேர்த்துக் கிளற வேண்டும். இது பொங்கி பூத்து வரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டிச் சமப்படுத்த வேண்டும். ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும்.

சிவப்பு மிளகாய் சாஸ்

சிவப்பு மிளகாய் சாஸ்

தேவையான பொருட்கள்:


நெய் - 1 மேசைக் கரண்டி
பூண்டு - 6 பல்
தக்காளி சாஸ் - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த சிவப்பு மிளகாய் - 6


செய்முறை:

நெய்யில் பூண்டு, சீரகம், வற்றலை வதக்கி எலுமிச்சம் பழச் சாறு விட்டு, அரைத்து உப்பு, தக்காளிச் சாஸுடன் சேர்க்க வேண்டும். இப்போது மிளகாய் சாஸ் தயார். இதனை ப்ரைடு ரைஸ், சீன வகை உணவுகள், ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

ஒயிட் சாஸ்

ஒயிட் சாஸ்

தேவையான பொருட்கள்:


மைதா - 10 கிராம்
பால் - 100 மில்லி
வெண்ணை - 10 கிராம்
உப்பு, மிளகுத் தூள் - தேவைக்கேற்ப



செய்முறை:

வெண்ணையை இளக்கி அடுப்பிலிருந்து இறக்கி மாவைப் போட்டுக் கிளற வேண்டும். நல்ல பசை மாதிரி வந்தவுடன் அதனுடன் பால் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் போட்டு லேசான சூட்டில் கெட்டியாக வரும்படி கிளற வேண்டும்.

பூண்டு சாஸ்

பூண்டு சாஸ்

தேவையான பொருட்கள்:


பூண்டு - 100 கிராம்
இஞ்சி - 50 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 200 கிராம்
சிவப்பு மிளகாய் சாஸ் - 200 கிராம்
அஜினோ மோட்டோ - 3 தேக்கரண்டி
சீனி - 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
ராஸ் பெர் கலர் - சிறிது.



செய்முறை:

100 கிராம் எண்ணையைக் காய வைத்து அதில் 50 கிராம் வற்றல் பொடி சேர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் கலந்து விட வேண்டும். பூண்டு சாஸ் ரெடி!

ஆமை வடை

ஆமை வடை

தேவையான பொருட்கள்:


கடலைப்பருப்பு - அரை கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
துவரம்பருப்பு - அரை கப்
பச்சைமிளகாய் - 6
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 கப்


செய்முறை:

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், புளியினைப் போட்டு முறித்து, நுரை அடங்கியவுடன், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரு வாழை இலையில் வடைகளாக தட்டிப்போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.

கீரை வடை

கீரை வடை

தேவையான பொருட்கள்:


முளைக்கீரை - ஒரு கட்டு

உளுத்தம் பருப்பு - 200 கிராம்

பெருங்காயம் - ஒரு துண்டு

மிளகாய்வற்றல் - 5
பச்சைமிளகாய் - 3


செய்முறை:

முளைக்கீரையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து சுத்தம் செய்து அவற்றுடன் வற்றல் மிளகாய், பெருங்காயம் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நறநறப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். மாவுடன் நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, மாவினை மெல்லியதாகத் தட்டி வாணலியில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.

மெதுவடை

மெதுவடை

தேவையான பொருட்கள்:


உளுத்தம் பருப்பு - 200 கிராம்
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - ஒரு சிறுதுண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து கல் நீக்கி சுத்தம் செய்து கிரைண்டரில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அரைக்கும்போது பெருங்காயம் கரைத்த நீர், உப்பு சேர்த்து கெட்டியாக சற்று நறநறவென்று அரைத்து எடுக்க வேண்டும். மாவில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, தட்டிய மிளகு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயும்போது, இலையில் நீர் தடவி, ஓர் உருண்டை மாவை வைத்து தட்டி நடுவில் விரலைக் கொண்டு துளை செய்து சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறத்தில் சுட்டெடுக்கவும்

மசால் வடை


மசால் வடை

தேவையான பொருட்கள்:


கடலைப்பருப்பு - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 8
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பற்கள்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லி சிறிது
கருவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையான அளவு


செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயத்தை மெல்லிய நீள வில்லைகளாகவும், பச்சைமிளகாயைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொண்டு. சோம்பைத் தூள் செய்ய வேண்டும்.

நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கொத்துமல்லி, கருவேப்பிலையை மாவில் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

மாவை எலுமிச்சங்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாகச் செய்துகொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய்யை விட்டு சுட வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாய் எடுத்து வாணலியில் விட வேண்டும்.

ஒரு பக்கம் சிவந்து வந்த பின் திருப்பி விட்டு மறுபக்கமும் சிவந்து வந்ததும் எடுத்தால் மசால் வடை சுடச் சுட தயார்.

கேசரி

கேசரி

தேவையான பொருட்கள்:

ரவை - 250 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
குங்குமப்பூ - அரை கிராம்
திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
கேசரிப்பவுடர் - அரைத்தேக்கரண்டி

செய்முறை:

வாயகன்ற பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைக்க வேண்டும். நெய் காய்ந்ததும் முந்திரி, திராட்சையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி அரை லிட்டர் தண்ணீர் விட வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது ரவையைப் போட்டு வேகவிட வேண்டும். அடிப்பிடிக்காவண்ணம் அவ்வபோது கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். தண்ணீர் சுண்டி ரவை வெந்ததும் சர்க்கரையைப் போட்டுக் கிளற வேண்டும். சர்க்கரையும் ரவையும் சேர்த்து இளகியதும் நெய் சிறிது விட்டு கிளற வேண்டும்.

கேசரி தளரும்போதெல்லாம் நெய் விட்டுக் கிளறிக்கொண்டே வர வேண்டும். கடைசியில் குங்குமப்பூ, கேசரிபவுடருடன் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் பாத்திரத்தில் ஒட்டாவண்ணம் கிளற வேண்டும்.

தோசை

தோசை

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 300 மி.லி
உளுத்தம்பருப்பு - 100 மி.லி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு மூன்று பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் மூன்றில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.

அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.

அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். அரிசியை நன்கு மிருதுவாக அரைத்துக்கொண்டால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.

அரிசியுடன் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து ஊறவைத்து அரைத்துக்கொண்டால் தோசை ஒட்டாமல் வரும்.

பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து புளிக்க விடவும்.

முதல்நாள் இரவு அரைத்துவைத்து மறுநாள் காலை பயன்படுத்த நன்றாக இருக்கும்.

தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

ரவா தோசை

ரவா தோசை

தேவையான பொருட்கள்:

ரவா - ஒரு கப்
மைதா - அரை கப்
அரிசிமாவு - அரை கப்
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
கறிவேப்பிலை சிறிது


செய்முறை:

ரவா, மைதா, அரிசி மாவு இவற்றுடன் சீரகம் மற்றும் உப்புச் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய்களைப் பொடியாக நறுக்கி, கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து இருந்து பிறகு எடுத்து தோசையாக ஊற்ற வேண்டும். தோசையைச் சுற்றிலும் எண்ணெய் விட்டு, பிறகு எடுத்துத் திருப்பிப் போட்டு வேகவிட வேண்டும். இரண்டு பக்கமும் நன்கு வெந்த பிறகு எடுத்துப் பரிமாற வேண்டும்.

ஆப்பம்

ஆப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 மி.லி

புழுங்கல் அரிசி - 500 மி.லி

தேங்காய் - 1 மூடி

ஈஸ்ட் - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிதளவு

சோடா உப்பு - சிறிதளவு


செய்முறை:

பச்சரிசியையும், புழுங்கல் அரிசியையும் ஒன்றாக சேர்த்து நன்கு ஊறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை நன்கு புளிக்கவிடவேண்டும். இரவு சிறிது ஈஸ்ட் அல்லது கொஞ்சம் மோரினை மாவில் இட்டு கலந்து வைத்துவிட வேண்டும். தேங்காயினைத் துருவி, பிழிந்து முதல் பாலினை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது முறை பிழிந்து எடுக்கும் பாலினை மாவுடன் கலந்து, சிறிது உப்பும், சோடா உப்பும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். தோசைமாவைவிட இன்னும் சற்று நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். வாணலி சூடானதும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி, வாணலியை சுழற்றி மூடி வைக்க வேண்டும். சிறிது நேரம் சென்று வெந்தவுடன் எடுக்க வேண்டும். மாவினை எடுப்பதற்கு முன்பு சிறிது தேங்காயினையும் துருவிப்போட்டு அரைத்துக்கொண்டால் ஆப்பம் ருசியாக இருக்கும்.

உப்புமா

உப்புமா

தேவையான பொருட்கள்:

ரவை: 500 கிராம்
பெரிய வெங்காயம்: 2
பச்சை மிளகாய்: 4
கடலைப்பருப்பு: 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை: சிறிது
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ரவையை வெறும் வாணலியில் இட்டு வறுத்து, வாசனை வந்தவுடன் தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவந்து வரும்போது பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், ரவையின் அளவில் இருமடங்கு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நீர் கொதிக்கையில் சிறிது சிறிதாக ரவையினை விட்டு நன்கு கிளறியபடி இருக்கவும். மிதமான தீயில் உப்புமாவை மூடி வேகவைத்து இறக்க வேண்டும்.



இடியாப்பம்

இடியாப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி: 500 மி.லி
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை இடித்தோ அல்லது மிக்சியில் இட்டு அரைத்தோ மாவு தயாரிக்க வேண்டும். இடித்த மாவினை இலேசாக வறுத்து, மாவு பதமாகி வரும் நிலையில் எடுத்து, சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். இன்னொறு முறையில், மாவினை இட்லி சட்டியில் துணி போட்டு வேகவைத்து, பின்பு அதனை ரவை சல்லடையில் சலித்து, கட்டிகளை உடைத்து நீக்கி, மீண்டும் மாவு சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீரை மிதமாக கொதிக்க வைத்து, தேவையான அளவு மாவில் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, இடியாப்பக்குழலில் இட்டு பிழிந்து இட்லிப்பானையில் அவித்து எடுக்க வேண்டும்.


பேல் பூரி

பேல் பூரி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 சிறிய கப்
பேரீச்சம்பழம் - 150 கிராம்
கடலை பருப்பு - 25 கிராம்
அரிசிப்பொரி - கால் கிலோ
புளி - 25 கிராம்
வெல்லம் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 4
உருளைக்கிழங்கு - 4
மிளகாய்த்தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 15
கொத்துமல்லி - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

கோதுமை மாவில் உப்புக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டுப் பூரிப் பதத்திற்கு மாவு பிசைந்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிட வேண்டும். பின்னர், மிகச்சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். விதை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், புளியையும் மூன்று கப் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து நன்றாக கடைந்துகொண்டு அதில் வெல்லத்தையும் சேர்க்க வேண்டும்.

கடலைப் பருப்பையும், பச்சை மிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலக்க வேண்டும். இரண்டு சட்னியையும் தனித்தனியாக வைக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசிப்பொரி, நொறுக்கிய பூரித்துண்டுகள், உப்பு, மிளகாய்த்தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். இந்த கலவையில் தேவையான அளவு இரண்டு சட்னியையும் சேர்த்துப் பரிமாற வேண்டும்.

பானி பூரி

பானி பூரி

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 100 கிராம்
ரவை - 50 கிராம்
புளி - 10 கிராம்
மிளகாய் - 6
வெல்லம் - 10 கிராம்
தனியா - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
மசாலாத்தூள் - அரைத்தேக்கரண்டி
புதினா சிறிது
எண்ணெய் - 250 கிராம்
உப்பு தேவையான அளவு


செய்முறை:

மைதா மாவு, ரவை அதற்குத் தேவையான உப்பு மூன்றையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை விட்டு தண்ணீர் தேவையான அளவு விட்டு பூரிமாவு போல் பிசைந்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பிசைந்த மாவை ஒரளவு பெரிய உருண்டைகளாகச் செய்ய வேண்டும். பெரிய அப்பளமாகச் செய்து கொள்ள வேண்டும். ஏதாவது டப்பாவின் அடிப்பாகம் கூராகவுள்ள மூடியை ஏடுத்து அதை அப்பளத்தின் மீது வைத்து அழுத்திச் சிறு பூரிகளாக ஏடுத்து கொள்ள வேண்டும். வாணலியில் சுத்தமான எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூரியைப் போட்டுப் பொரிக்க வேண்டும். பூரி நன்றாக உப்பி வரும்போது, அதனை எடுத்து டப்பாவில் போட்டு மூட வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் புளி, உப்பு, வெல்லம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட வேண்டும். மிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றைப் பொடி செய்து கொள்ள வேண்டும். மசாலா பொடியையும் போட்டு, புதினாவை அரைத்து அதன் சாறைப் பிழிந்து எல்லாவற்றையும் நன்றாகக் கலக்க வேண்டும். பூரியின் மத்தியில் விரலால் ஒட்டை செய்து புளித்த நீரை மொண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

ரவா இட்லி

ரவா இட்லி

தேவையான பொருட்கள்:


ரவை - 1 டம்ளர்
நல்லெண்ணெய் சிறிது
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
இஞ்சி சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தயிர் ஒரு டம்ளர்
புளித்த இட்லி மாவு - 2 டம்ளர்
உப்பு தேவையான அளவு


செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்த பின்பு உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் ரவையையும் சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த பிறகு கீழே இறக்கும்போது பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

பிறகு மஞ்சள்தூள் சேர்த்து, புளித்த இட்லி மாவைக்கலந்து அதனுடன் தயிரையும் ஊற்றி கலந்து மூடி வைத்துவிடவும். அரைமணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி வைத்து எடுக்கவேண்டும்.

போண்டா

போண்டா

தேவையான பொருட்கள்:


உளுத்தம்பருப்பு - 200 கிராம்
பச்சைமிளகாய் - 8
மிளகு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - அரைத்தேக்கரண்டி
தேங்காய் - 5 கீற்றுகள்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

உளுத்தம்பருப்பை இரண்டுமணி நேரம் நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து நீரை வடித்துக் கொள்ள வேண்டும். தேங்காய் கீற்றினை சிறு சிறு பற்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் உளுத்தம்பருப்புடன் இரண்டு பச்சைமிளகாய் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டு இதனுடன் மிளகு, சீரகம், தேங்காய் சேர்த்து கலந்து கொண்டு, எண்ணெய் காய்ந்ததும், எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிப் போடவேண்டும். கண்கரண்டியினால் அடிக்கடி புரட்டிவிட்டு, பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுத்தால் போண்டா ரெடி.

பனீர் பட்டர் மசாலா

பனீர் பட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:


பனீர் - கால் கிலோ
பச்சை பட்டாணி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - 2 விழுது
பூண்டு - 2 விழுது
சீரகம் - அரை தேக்கரண்டி
மல்லித்தழை - கால் கட்டு
வெண்ணெய் - 100 கிராம்
எண்ணெய் - ஒரு குழி கரண்டி
மல்லி தூள் - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 100 கிராம்
உப்பு தேவையான அளவு


செய்முறை:


முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட வேண்டும். அது வெடித்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதங்கியதும் தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதோடு மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பனீர், பச்சை பட்டாணி எல்லாத்தையும் போட்டு வதக்கி வேக வைக்க வேண்டும். இத்துடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். இறக்கும் பொழுது பட்டர், முந்திரி பருப்பு சேர்க்க வேண்டும்.

பனீர் தயார் செய்யும் முறை:

பாலை அடுப்பில் வைத்து பொங்கும் பொழுது தயிர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் பால் திரிந்து வரும். அதை ஒரு சுத்தமான துணியில் வடிகட்டி அதை ஒரு தட்டின் மீது துணியோடு வைத்து அதன் மேல் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அழுத்தினால் சமமாக வரும். இதை பிரிட்ஜில் வைக்க வேண்டும். குறைந்தது 2 மணிநேரம் பிரிட்ஜில் இருக்க வேண்டும். பின்னர் அதை வெளியில் எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.

உருளைக்கிழங்கு குருமா

உருளைக்கிழங்கு குருமா

தேவையான பொருட்கள்:


உருளைக்கிழங்கு- கால் கிலோ
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்லு
பட்டை - ஒரு துண்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் - அரை மூடி
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு



செய்முறை:


கசகசா, தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மஞ்சள் பொடி மற்றும் அரைத்த மசாலாவைப் போட்டு சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். சற்று கொதித்தவுடன் உருளைக் கிழங்கினையும், உப்பையும் போட்டு குருமா கெட்டியானவுடன் இறக்க வேண்டும். இறக்கும் போது 2 அல்லது 3 துளி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கினால் ருசியாக இருக்கும்.

எள்ளுருண்டை

எள்ளுருண்டை

தேவையான பொருட்கள்:


வெள்ளைஎள் - 4 கப்
நாட்டுச் சர்க்கரை - 3 கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி



செய்முறை:


வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் விடாமல் அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த எள்ளை அம்மியில் இடித்து பிறகு அதனுடன் சர்க்கரைச் சேர்த்து இடித்து, கடைசியாக ஏலப்பொடி சேர்த்து சிறிது நேரம் இடிக்க வேண்டும். இடித்து வைத்துள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக நன்கு அழுத்தி உருட்டிக் கொள்ள வேண்டும்.

இனிப்பு கோதுமை அடை

இனிப்பு கோதுமை அடை

தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு: கால் கிலோ
பால்: 100 மில்லி
தேங்காய்: அரை மூடி
எண்ணெய்: 100 கிராம் ரவை: 50 கிராம்
சர்க்கரை: 150 கிராம்


செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாலை காய்ச்ச வேண்டும். அதன் பின்பு பால், சர்க்கரை, ரவை, தேங்காய் துருவல் ஆகியவற்றை மாவில் போட்டு நன்றாக பிசைய வேண்டும்.

பின்பு தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை போட்டு அடையாகத் தட்ட வேண்டும். அதை சுற்றி எண்ணெயை விட வேண்டும். வெந்ததும் திருப்பிபோட்டு எடுத்தால் இனிப்பு அடை சாப்பிடத் தயார்.

உருளைக்கிழங்கு பொரியல்

உருளைக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு: 300 கிராம்
சாம்பார் பொடி: 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு: 1 தேக்கரண்டி
புளி: கைப்பிடி அளவு
கடுகு: அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய்: சிறிதளவு
நெய்: அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி: சிறிதளவு
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கினை கழுவி தோலோடு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவேண்டும். புளியினை சிறிது நீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவைகளைப் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு புரட்டிக் கொடுக்க வேண்டும்.

உருளைக்கிழங்கில் உள்ள நீர் சுண்டும்வரை புரட்ட வேண்டும். நீர் சுண்டியதும் உப்பு சிறிது சேர்த்துக் கிளறி கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியினை ஊற்ற வேண்டும். பிறகு சாம்பார் பொடி 1 தேக்கரண்டி போட்டு நன்றாய் வெந்ததும், சிறிது நெய் விட்டு கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும்.

முட்டைகோசுப் பொரியல்

முட்டைகோசுப் பொரியல்

தேவையான பொருட்கள்:

முட்டைகோசு - 1
தேங்காய் - 1
தக்காளி - 50 கிராம்
வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 10 கிராம்
மிளகு - அரைத்தேக்கரண்டி
சீரகம் - அரைத்தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கட்டு
மிளகாய்ப்பொடி - ஒரு மேசைக்கரண்டி
புளி - 5 கிராம்
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

தேங்காயை உடைத்துத் துருவி பாதியை எடுத்து வைத்து விட்டு மீதியைப் பால் பிழிந்து கொள்ள வேண்டும். கொத்தமல்லியை வேரை நீக்கி, அத்துடன் எடுத்து வைத்த தேங்காய் துருவல், மிளகு, சீரகம், உரித்த பூண்டு இதனுடன் இஞ்சியையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். புளியுடன் பாதி உப்புப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஊறவைக்க வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்க வேண்டும். தக்காளியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்துத் தோலை நீக்கி பழத்தை மத்தால் மசித்துக் கொள்ள வேண்டும். முட்டைகோசை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு, பாதி உப்பு போட்டு அடுப்பில் வைத்து மூடியால் மூடிவிட வேண்டும்.

முட்டைகோசு வெந்ததும் தண்ணீரை வடித்துவிட வேண்டும். கோஸின் இலைகளை சிறிது பிடித்து அரைத்த விழுதில் பாதியை எடுத்து தடவ வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்து தேங்காய்ப் பாலில் விட வேண்டும். மீதிவிழுதைப் போட்டு கலந்து விட வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்க வேண்டும். தக்காளி ரசத்தையும், உப்பையும் போட வேண்டும். தேங்காய்ப் பால், புளி, மசாலா கரைசலை விடவும். சுமார் 10 நிமிடம் அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். தண்ணீர் சுண்டி, மசாலாவானது கோசுடன் கலந்ததும் இறக்கி வைக்க வேண்டும்

உருளைக்கிழங்கு குழம்பு

உருளைக்கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - 4 தேக்கரண்டி



செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து தோலுரித்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய், கசகசா, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், சோம்பு, தக்காளி ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளையும், அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கிவிட வேண்டும்.